ஒரே ஞானஸ்நானம் ஒரே கர்த்தரும் ஒரே விசுவாசமும் ஒரே ஞானஸ்நானம் (எபேசி 4:5) பவுல் எபேசியருக்கு எழுதின நிருபத்தில் ஒரே ஞானஸ்நானம்தான் உண்டு என்று திட்டவட்டமாக கூறுகிறார். இன்று அநேகர் குழந்தையிலோ அல்லது மூழ்கியோ ஞானஸ்நானம் எடுத்துவிட்டால் அதுதான் பவுல் சொல்லுகிற ஒரே ஞானஸ்நானம் என்று நினைக்கிறார்கள். இன்னும் சிலர் தாங்கள் கொடுத்த ஞானஸ்நானம்தான் உண்மையானது என்றும் அதுவே ஒரே ஞானஸ்நானம் என்றும் போதித்து ஜனங்களை தவறான பாதையில் வழி நடத்துகின்றனர். ஆனால் வேதம் எதை ஒரே ஞானஸ்நானம் என்று போதிக்கிறதோ அதுவே உண்மையான ஞானஸ்நானமும் ஒரே ஞானஸ்நானமும் ஆகும். எந்த மனுஷனும் பொய்யன், தேவன் ஒருவரே சத்தியபரர். அவருடைய வார்த்தைகள் மாறாதவைகள், அவருடைய வார்த்தையோடு ஒன்றையும் கூட்டவோ குறைக்கவோ யாருக்கும் உத்தரவு இல்லை, (எபி 13:8, மல்கியா 3:6, மத் 24:35, வெளி 22:18, நீதி 30:6), பரிசுத்த பவுல் ஒரே ஞானஸ்தானத்தைப் பற்றி எபேசிய சபையிலுள்ள ஜனங்களுக்கு போதிக்கிறார். (எபே 1:1, 4:5) அந்த எபேசிய ஜனங்களுக்கு ஒரே ஞானஸ்நானம்தான் உண்டு என்று போதிப்பதோடு மட்டுமல்லாமல் கொடுக்கவும் செய்கிறார். எபேசிய ஜனங்களுக்கு அவர் எந்த நாமத்திலே ஞானஸ்நானத்தை கொடுத்தார் என்பதை வேதம் தெளிவாக சொல்கிறது. அதைதான் பவுல் ஒரே ஞானஸ்நானம் என்று போதிக்கிறார். அப் 19:1,ன்படி பவுல் எபேசிக்கு வந்தபோது சில விசுவாசிகள் கண்டு எந்த ஞானஸ்தானம் எடுத்தீர்கள் என்று கேட்டான். அதற்கு அவர்கள் யோவான் கொடுத்த ஞானஸ்நானம் பெற்றோம் என்றார்கள், அதை பவுல் அங்கீகரிக்கவில்லை. ஏனென்றால் யோவான் பாவமன்னிப்புக்காக ஞானஸ்நானம் கொடுக்கவில்லை. இதை அவர்கள் கேட்டபோது கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் ஞானஸ்நானம் பெற்றார்கள். இதுவே வேதம் சொல்லும் ஒரேஞானஸ்நானம் ஆகும் இப்போது மத் 28:19 வசனத்தை கவனமாக வாசியுங்கள். ஆகையால் நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகள்யும் சீஷராக்கி பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்து, நான் உங்களுக்கு கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள், இதோ உலகத்தின் முடிவு பரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனே கூட இருக்கிறேன் என்றார். ஆமென். இயேசுகிறிஸ்து தாம் தெரிந்து கொண்ட பதினொரு சீஷர்களும் கலிலேயாவிலே இயேசு தங்களுக்கு குறித்திருந்த மலைக்கு போனார்கள் என்று சொல்லப்பட்டிருக்கிறது, மத் 28:16 ஆகவே ஒரே இடத்தில் ஒரே நேரத்தில் பதினொரு சீஷர்களுக்கும் பிதா குமாரன் பரிசுத்த ஆவி நாமத்தினாலே ஞானஸ்நானம் கொடுக்கும்படி இயேசுகிறிஸ்து கட்டளை கொடுத்தார். அதுமட்டுமல்ல கட்டளையிட்ட இயேசுகிறிஸ்து கட்டளைபெற்ற சீஷர்களோடு சகல நாட்களிலும் கூடவே இருக்கிறேன் என்றும் உறுதி அளித்தார். இந்த உறுதி எதற்கு என்றால் கொடுத்த கட்டளையை நிறைவேற்றவும், அடையாளங்களையும் அற்புதங்களையும் நடத்தி சீஷர்கள், பேசுவதுதான் சத்திய வசனங்கள் என்று நிருபிக்கவும்தான் மத் 28:19ல் கட்டளையாக பெற்ற பதினொரு சீஷர்களும் அப் 2:14-ல் அப்படியே அத்தனை பேரும் இருக்கக் காண்கிறோம். அது மட்டுமல்ல சகல நாட்களிலும் உங்களோடு கூட இருக்கிறேன் என்று உறுதி அளித்த இயேசுகிறிஸ்து வாக்கு தவறாமல் அங்கே இருக்க காண்கிறோம். அவர்களுக்கு உள்ளேயும் இருந்தார். அவர்களுக்கு முன்பாகவும் இருந்தார். கட்டளை பெற்றது கலிலேயாவிலுள்ள ஒரு மலைமேலே. கட்டளை நிறைவேறியது எருசலேமில், அந்த இரண்டு இடங்களிலும் இருந்தவர்களில் எவரும் எங்கும் போய்விடவில்லை. அத்தனைபேரும் அப்படியே இருந்தார்கள். இயேசுகிறிஸ்தும் அவர்களுடன் கூட இருந்தார். பெந்தெகொஸ்தே என்னும் பண்டிகை நாளில் பரிசுத்த ஆவியை சீஷர்கள் பெற்ற பின்பு இயேசுகிறிஸ்து சொன்ன கட்டளையை நிறைவேற்றினார்கள். அப் 2:37, 38 எருசலேமில் கூடியிருந்த ஜனங்கள் இதை அவர்கள் கேட்டபொழுது இருதயத்திலே குத்தப்பட்டவர்களாகி பேதுருவையும் மற்ற அப்போஸ்தலரையும் பார்த்து சகோதரே நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்றார்கள். பேதுரு அவர்களை நோக்கி நீங்கள் மனம் திரும்பி ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கு என்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுங்கள் என்றார். அப் 2:38 இப்படி முதல் முறையாக பரிசுத்த ஆவி சீஷர்கள்மேல் வந்தபோது அன்றையதினம் ஏறக்குறைய மூவாயிரம் பேர் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்று இரட்சிக்கப்பட்டார்கள் மற்றும் இரட்சிக்கப் பட்டவர்களை கர்த்தர் அனுதினமும் சபையிலே [கிறிஸ்துவின் சரீரத்தில்] சேர்த்துக் கொண்டு வந்தார். இப்பொழுது இயேசு கிறிஸ்து சொன்ன கட்டளையை கவனமாக வாசியுங்கள். பிதா குமாரன் பரிசுத்த ஆவி நாமத்திலே ஞானஸ்தானம் கொடுக்கும்படி கட்டளையிட்டார். கட்டளை பெற்று கொண்ட சீஷர்கள் பரிசுத்த ஆவியை பெற்ற பின்பு இயேசு கிறிஸ்துவின் நாமத்திலே ஞானஸ்நானத்தை கொடுத்தார்கள். என்ன இது புதிய குழப்பமாய் இருக்கிறதே என்று நீங்கள் இப்போது யோசிக்கலாம். ஆனால் வேதத்திலே குழப்பத்திற்கு இடமில்லை. இப்போது கவனியுங்கள் பேதுரு ஜனங்களை நோக்கி நீங்கள் மனம் திரும்பி கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்திலே ஞானஸ்நானம் எடுங்கள், என்றார். அப்போது மத் 28:19ல் பிதா குமாரன் பரிசத்த ஆவியின் நாமத்திலே ஞானஸ்நானம் கொடுங்கள் என்று இயேசு கிறிஸ்து கொடுத்த கட்டளைக்கு எதிராக பேதுரு கொடுத்த ஞானஸ்நானம் தவறாக இருந்திருந்தால் மத் 28:19ஐ எழுதின மத்தேயு சும்மா இருந்திருப்பாரா? இயேசு கிறிஸ்து ஒன்றை சொல்ல நீர் ஒன்றை சொல்கிறீரே என்று அங்கே மறுத்திருப்பாரே கட்டளை கொடுத்த இயேசுகிறிஸ்துவும் அங்கேயே இருந்தாரே. பேதுரு சரியாக செய்யாதிருந்தால் அவர் திருத்தி இருக்கமாட்டாரா ? பேதுரு ஜனங்களைப் பார்த்து கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுங்கள் என்று சொல்லும் போது இயேசுகிறிஸ்துவும் மத்தேயும் மற்ற அப்போஸ்தலரும் பேதுரு கொடுத்த ஞானஸ்நானம் விஷயமாய் மறுத்து எதிர்த்து இருக்கமாட்டாரா? பேதுரு ஜனங்களைப் பார்த்து கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுங்கள் என்று சொல்லும் போது இயேசுகிறிஸ்துவும் மத்தேயுவும் மற்ற அப்போஸ்தலரும் பேதுரு கொடுத்த ஞானஸ்நானம் விஷயமாய் மறுத்து எதிர்த்து திருத்தாமல் அவருக்கு பக்கபலமாய் நின்றது ஏன் ? பேசினது பேதுரு அல்ல பேதுரு மூலம் கர்த்தர் பேசினார். ஆதலால்தான் கர்த்தர் பக்கபலமாய் நின்றார். பேசுகிறது பேதுரு அல்ல பேதுரு மூலமாக பரிசுத்த ஆவியானவர் பேசினார். என்பதே மத்தேயுக்கு தெரியும். மற்ற அப்போஸ்தலர்களுக்கு தெரியும், மத் 10:20 ஆதலால் எவரும் பேதுருவை மறுத்து பேசவில்லை. எதிர்க்கவும் இல்லை. திருத்தவும் இல்ல, அதற்கு பதிலாக துணையாக நின்றார்கள். பேதுருவுக்கு பதிலாக அங்கே மத்தேயுவே பேசியிருந்தாலும் மற்ற அப்போஸ்தலரில் எவர் பேசியிருந்தாலும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்திலே ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுங்கள் என்று பேதுரு சொன்னதையே சொல்லி இருப்பார்கள். காரணம் மத்தேயுவா இருந்தாலும் பேதுருவாயிருந்தாலும் தோமாவாயிருந்தாலும் மற்ற எந்த அப்போஸ்தலராயிருந்தாலும் பேசுவது அவர்கள் அல்ல. அவர்கள் மூலமாக பேசுவது தேவன் (பரிசுத்த ஆவி) இயேசுகிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார். எபிரெயர் 13:8 அவர் மாறாமல் பேசுகிறவர் காலமோ, இடமோ, ஆளோ அவரை மாற்ற முடியாது. இதை குறித்து 1 கொரி 2:12, 13-ம் வசனங்கள் கூறுவதாவது நாங்களோ உலகத்தின் ஆவியை பெறாமல் தேவனால் எங்களுக்கு அருளப்பட்டவைகளே அறியும்படிக்கு தேவனில் இருந்து புறப்படுகிற ஆவியை பெற்றோம். அவைகளே மனுஷஞானம் போதிக்கிற வார்த்தைளாலே பேசாமல் பரிசுத்த ஆவி போதிக்கிற வார்த்தைகளாலே பேசி, ஆவிக்குரியவைகளை, ஆவிக்குரியவைகளோடு சம்பந்தப்படுத்தி காண்பிக்கிறோம். இதை புரிந்து கொள்ளாத இன்றைய ஊழியக்கார்கள். இயேசு சொன்னது வேறு, சீஷர்கள் சொன்னது வேறு என்று பிரித்து பேசுகிறார்கள், இன்றும் சிலர் பேதுரு கொடுத்த ஞானஸ்நானம் நாங்கள் எடுக்க மாட்டோம் என்று இயேசுகிறிஸ்து சொன்ன ஞானஸ்நானம் மட்டுமே எடுப்போம் என்று. சத்தியத்துக்கு விரோதமாக வாக்குவாதம் செய்கிறார்கள். ஆனால் வேதத்தில் எந்த மனுஷனுடைய வார்த்தையோ அல்லது சீஷர்களுடைய வார்த்தையோ இல்லவே இல்லை. வேதம் முழுவதும் பரிசுத்த ஆவியினாலே எழுதப்பட்டுள்ளது. II தீமோத் 3:16 ஆகவே பேதுரு பேசின வார்த்தைகள் பரிசுத்த ஆவியின் வார்த்தை களேயன்றி பேதுருவின் வார்த்தைகள் அல்லவே அல்ல. ஆகையால் பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து என்பதே பரிசுத்த ஆவியானவர் கொடுக்கும் விளக்கம். இதை புரிந்து கொள்ளாத சில ஊழியக்கார்களும் மற்ற விசுவாசிகளும் பேதுரு கொடுத்த ஞானஸ்நானம் நமக்கு அல்ல, எருசலேமில் கூடியிருந்த யூதர்களுக்கென்று நினைக்கிறார்கள் ஆனால் வேதமோ! யூதர்களுக்கு ஒன்று கிரேக்கர்களுக்கு ஒன்று ஐரோப்பியர்களுக்கு ஒன்று ஆசியனுக்கு ஒன்று என்று குலத்துக்கும் கோத்திரத்திற்கும் சார்ந்திருக்கிற சபைகளுக்கும் ஏற்றவாறு வெவ்வேறு ஞானஸ்நானம் அல்ல, எவராயினும் ஒரே ஞானஸ்நானம் தான் பெறவேண்டும். எங்கும் எவருக்காகவும் முறை மாறக் கூடாது. ஆகையால் இயேசு கிறிஸ்து சகல ஜாதிகளுக்கும் ஒரே ஞானஸ்நானத்தை கொடுங்கள் என்றார். பிதா குமாரன் பரிசுத்த ஆவி நாமத்திலே (நாமம் என்றால் பெயர்) ஞானஸ்நானம் கொடுக்கும்படி கட்டளையிட்டார். பிதா குமாரன் பரிசுத்த ஆவி என்பது மூன்று தேவர்களையோ அல்லது மூன்று நபர்களையோ குறிக்கவில்லை. அது ஒரே தேவனுடைய மூன்று பதவிகளையே குறிக்கின்றது நாம் தெளிவாக புரிந்து கொள்ளுகிறோம். மேலும் இயேசு கிறிஸ்து பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமங்களிலே என்று பண்மையிலே சொல்லாமல் நாமத்திலே என்று ஒருமையிலே சொல்வதே மிக தெளிவாக எழுதப்பட்டுள்ளது. மத் 28:19 உண்மையாகவே மூன்று தேவர்களோ அல்லது மூன்று நபர்களோ இருப்பார்களானால் நிச்சயமாக நாமங்களிலே என்று பண்மையிலே சொல்லி இருப்பார். சர்வ ஞானமுள்ள தேவன் நாமத்திலே என்று ஒருமையிலே சொன்னபடியால் பிதா குமாரன் பரிசுத்த ஆவிக்கு ஒரு நாமம் உண்டு அதாவது ஒரு பெயர் மட்டுமே உண்டு என்பதே தெளிவாகப் புரிந்து கொள்ளுகிறோம். அந்த ஒரே நாமத்திலே ஞானஸ்நானம் கொடுக்கவேண்டும் என்பதே இயேசு கிறிஸ்து நமக்கு கொடுத்த கட்டளையாகும். அதாவது பிதா குமாரன் பரிசுத்த ஆவியாக வெளிப்பட்ட அந்த ஒரே தேவனுடைய நாமத்திலே ஞானஸ்நானம் கொடுக்க வேண்டும் என்பதே நமக்கு கொடுக்கப்பட்ட கட்டளையாகும் பிதா (அப்பா) என்பது பெயரல்ல குமாரன் (மகன்) என்பது பெயரல்ல. பரிசுத்த ஆவி (ஆவி) என்பது பெயரல்ல. இவைகள் தகப்பன், மகள், ஆவி என்கிற ஸ்தானங்களை குறிக்கின்ற பட்டபெயர்களே ஆகும். பிதா குமாரன் பரிசுத்த ஆவியாக வெளிப்பட்ட நம் தேவனுக்கு ஒரு பெயர் மட்டுமே உண்டு, நாம் பெயர் இல்லாத தேவனை ஆராதிக்கவில்லை. நாம் ஆராதிக்கின்ற ஜீவனுள்ள தேவனுக்கு பெயர் உண்டு. அந்த நாமம் எல்லா நாமத்துக்கும் மேலான நாமம் ஆகும். அந்த நாமம் கர்த்தராகிய இயேசுகிறிஸ்து என்பதே. பிலிப் 2:10 ஆமென். பரிசுத்த ஆவியானவர் மூலமாக கொடுக்கப்பட்ட இந்த உண்மையான வெளிப்பாட்டின் அடிப்படையில்தான் இயேசுகிறிஸ்து தெரிந்து கொண்ட அப்போஸ்தலர்கள் அனைவரும் பெந்தெகொஸ்தே என்னும் நாளிலே பரிசுத்த ஆவி பெற்று கொண்ட பின்பு யூதர்களுக்கும் கிரேக்கர்களுக்கும் புறஜாதியர்களுக்கும் சுவிசேஷத்தை அறிவிக்க ஆரம்பித்தனர். சுவிசேஷத்தை விசுவாசித்தவர்களுக்கு கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானத்தை கொடுத்தார்கள் அப்படியானால் பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமம் (பெயர்) கர்த்தராகிய இயேசு கிறிஸ்து என்பதே. இதுவே தேவனுடைய பரம இரகசியத்தின் வெளிப்பாடு. வேதம் முழுவதும் கொடுக்கப்பட்ட ஞானஸ்நானம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நாமத்தில் மாத்திரமே. வேதத்தில் ஒரு இடத்திலாகிலும் பிதா குமாரன் பரிசுத்த ஆவி நாமத்திலே என்று சொல்லி ஞானஸ்நானம் கொடுத்ததாக சம்பவங்களோ ஆதாரங்களோ இல்லவே இல்லை. அல்லது பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் பட்ட பெயரைச் சொல்லி ஞானஸ்நானம் கொடுத்த சீஷனோ அல்லது எடுத்த சீஷனோ வேதத்திலே இல்லவே இல்லை. அதற்கு மாறாக கொடுக்கப்பட்ட அத்தனை ஞானஸ்நானங்களும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்திலே கொடுக்கப்பட்டதாக வேதம் முழுவதும் தெளிவாக திட்டவட்டமாக எழுதப்பட்டுள்ளது. அப்படியானால் பிதாவின் நாமம் என்ன? குமாரன் நாமம் என்ன? பரிசுத்த ஆவியின் நாமம் என்ன? பிதாவின் நாமம் கர்த்தர் யாத் 3:15 குமாரன் நாமம் இயேசு, மத் 1:21 பரிசுத்த ஆவியின் நாமம் கிறிஸ்து ரோமர் 8:9 பிதா என்றால் கர்த்தர், குமாரன் என்றால் இயேசு பரிசுத்த ஆவி என்றால் கிறிஸ்து ஆகையால் பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமம் கர்த்தராகிய இயேசுகிறிஸ்து என்பதே ஆதிமணவாட்டி சபையும் ஆதி அப்போஸ்தலர்கள் கொடுத்த ஒரே உண்மையான ஞானஸ்நானம் இதுவே. ஆகையால் பேதுரு கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நாமத்திலே ஞானஸ்நானம் கொடுத்தார் அப் 2:38. ! இக்காலத்தில் சபைகள் பெரும் வஞ்சகத்திற்குள் நடத்தப்பட்டு கொண்டிருக்கின்றன. சாத்தானின் அடிச்சுவடு தீர்க்கதரிசியான பிலேயாம் மூலமாக வந்து இஸ்ரவேல் ஜனங்களை வஞ்சித்தது போல இன்றைய ஊழியக்காரர்கள் மூலமாக கிறிஸ்தவர்களை வஞ்சித்து கொண்டிருக்கிறது. எப்படி யென்றால் தேவன் தாம் தெரிந்து கொண்ட மணவாட்டியை பரிசுத்த ஆவியினாலே அபிஷேகம் செய்கிறார். சாத்தான் தன்னுடைய மணவாட்டியாகிய ஸ்தாபன சபைகளைதெரிந்து கொண்டு வானமண்டலத்து ஆவிகளை அனுப்பி வைக்கிறான். மணவாட்டி கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானத்தை பெற்றுகொள்ளும் போது சாத்தான் தந்திரமாக பிதா குமாரன் பரிசுத்த ஆவி என்னும் பட்டப்பெயர்களை திரித்துவ உபதேசத்தின் மூலமாக மற்றவர்களுக்கு கொடுத்து அவர்களை வஞ்சித்து விடுகிறான். தேவன் தம்முடைய வார்த்தைகளை மணவாட்டிக்கு ஜீவனாக கொடுக்கிறார். அதே வார்த்தைகளால் சாத்தான் மற்றவர்களுக்கு மாய்மால புரட்டு உபதேசங்களை கொடுத்து அவர்களை வஞ்சித்து விடுகிறான். இதனால் மணவாட்டியோடு சர்பத்தின் வித்துக்கள் யுத்தங்களை நடப்பித்து கொண்டிருக்கிறது. இஸ்ரவேலில் ராஜாவாக இருந்த சவுலுக்குள் அசுத்த ஆவி புகுந்து அவனை கர்த்தருடைய சத்தத்திற்கு கீழ்படியாமல் முரட்டாட்டம் பண்ணும்படி செய்தது. அதுபோல் இக்காலத்தில் ஸ்தாபன சபைகளுக்குள் அந்நிய ஆவி புகுந்து அவர்கள் தேவனுடைய வார்த்தைகளுக்கு கீழ்ப்படியாமல் முரட்டாட்டம் பண்ணும்படி செய்து கொண்டிருக்கிறது. கிறிஸ்தவர்களில் நூற்றுக்கு தொண்ணுறு பேர் இதுபோன்ற விக்கிரக ஆராதனையில் விழுந்து கிடக்கிறார்கள். 1 சாமு 15:22 தேவனுடைய வார்த்தைகளை புறக்கணித்து விட்டார்கள் மனிதர்களால் கற்று கொடுக்கப்பட்ட பாரம்பரியங்களை பின்பற்றுகிறார்கள். இதை வாசிக்கும் அருமையான சகோதர சகோதரிகளே இந்த கடைசி காலத்தில் பலவிதமான துர் உபதேசங்கள் எழும்பி பலரையும் வஞ்சித்து கொண்டிருக்கிறதான இக்கடைசி மணிவேளையிலே நாம் மிகவும் ஜாக்கிரதையாக இருந்து நமக்கு இக்கடைசி காலத்தில் அப்போஸ்தலர்களால் கொடுக்கப்பட்ட கலப்படமில்லாத ஒரே கர்த்தரும் ஒரே ஞானஸ்தானம் என்னும் சத்தியத்தை ஏற்று கொண்டு நாம் கர்த்தருடைய வருகைக்கும் அவருடைய எடுத்துக்கொள்ளபடுதலுக்கும் ஆயத்தப்படுவோம். காலம் மிகவும் பயங்கரமான விதத்தில் தாமதமாகிவிட்டது என்றும் வெகுவிரைவில் நம்முடைய அன்பர் கர்த்தராகிய இயேசுகிறிஸ்து தம்முடைய மணவாட்டியை ஆகாயத்தில் சந்திப்பார் (1 தெசலோனிக்யேர் 4:16,17) என்று அறிந்து நாம் பாவமன்னிப்புக்காக மணவாட்டி தன்னுடைய மணவாளனாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் பெற்றுகொண்டு இயேசுகிறிஸ்துவை சந்திக்க ஆயத்தப்படுவோம் ஆமென். நீங்கள் பாவமன்னிப்புக்கென்று பெறவேண்டிய ஒரே ஞானஸ்நானம் கர்த்தராகிய இயேசுகிறிஸ்து நாமத்தில் மாத்திரமே வேறு எந்த ஞானஸ்நானமும் செல்லாது. அப் 2:38